அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam, அஇஅதிமுக அல்லது அனைத்திந்திய அண்ணா திமுக) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. திமுகவிலிருந்து விலகிய பின்னர் எம். ஜி. இராமச்சந்திரன் இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்ற தலைவராக ௭டப்பாடி கே. பழனிசாமி (முதல்வர்) பதவியில் உள்ளார்.
வரலாறு[தொகு]
சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கணக்கு கேட்டதால்[சான்று தேவை] கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். புதியக் கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன் இராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும் அளித்தார்.[2] இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
எம்.ஜி.ஆர். காலம்[தொகு]
எம்.ஜி.ஆரால் 1972இல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. தனது முதல் தேர்தலை 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[3] அதைத் தொடர்ந்து 1977-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), அனைத்திந்திய பார்வார்டு பிளாக், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பெரும்பாலான இடங்களில் வெற்றி கண்டது.[4] நான்குமுனைப் போட்டியில் தி.மு.க. மொத்தமிருந்த 234 இடங்களில் வெறும் 48 இடங்களை மட்டுமே பெற்றது.
எம்.ஜி.ஆர்-ஐப் போலவே என்.டி. இராமராவ்வும் திரைப்பட உலகில் இருந்து அரசியலுக்கு வந்து ஆந்திர தேர்தலில் வெற்றிபெற்றார். எம்.ஜி.ஆர் ஒருமுறை மருத்துவமனையில் இருந்த போது பிரசாரத்திற்கே செல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றார்.
கொடியின் வரலாறு[தொகு]
அதிமுகவின் துவக்க கால கொடியாக தாமரையும் அதன் பின்னால் கருப்பு சிவப்பு இருந்தது.[5] மதுரையில் ஜான்சி ராணி பூங்காவில் மகோரா அவர்களால் 1972 ஆம் ஆண்டு ஏற்றப்பட்டது.
எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்தியை அறிந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்[சான்று தேவை]தாமரை படமிட்ட கொடியை கட்சி கொடியாக தங்கள் வீடுகளிலும், குடிசைகளிலும் ஏற்றினார்கள். அதன் பிறகு எம்.ஜி.ஆர், அண்ணாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து அதில் சிறப்பாக இருந்த அண்ணாவின் படமொன்றினை தேர்வு செய்தார். அதில் அண்ணா ஆணையிடுவதைப் போல தோற்றமளிப்பார். இந்தப் படத்தினை அண்ணா தோற்றுவித்த தி.மு.கவின் சிகப்பு கருப்பு கொடியோடு இணைத்து அண்ணா தி.மு.கவின் தற்போதைய கொடியமைப்பினை எம்.ஜி.ஆர் உருவாக்கினார்.
எம்ஜிஆரின் வழிகாட்டுதலோடு நடிகர் பாண்டு அதிமுக கொடியை உருவாக்கினார்.[6][7]
பெயர் மாற்றம்[தொகு]
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று எம்.ஜி.ஆர் மாற்றினார். இதற்கு கட்சிக்குள் சிலர் ஏற்கவில்லை என்றாலும், பின் எம்.ஜி.ஆர் பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தப் பின் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.
எம்.ஜி.ஆரின் மறைவும் ஜெயலலிதா காலமும்[தொகு]
தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. இராமச்சந்திரன் திசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சர்ச்சை எழுந்தது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜியாரின் மனைவி ஜானகி இராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அஇஅதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார்.
புதிய அரசின் மீது சனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. திமுக, இந்திரா காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில சச்சரவு ஏற்பட்டது. அவைத் தலைவர் ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி இராமச்சந்திரன் அதில் வெற்றி பெற்றார். ஆனால் சட்டசபையில் நடந்த கலவரம் காரணமாக ஜனவரி 30, 1988 ஆம் ஆண்டு ஜானகி ஆட்சியைக் கலைத்தது மத்திய அரசு.
சனவரி 21, 1989 இல் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.69 % வாக்குகள் பதிவாகின. மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிருவாக காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை; இருமாதங்கள் கழித்து மார்ச்சு 11 ஆம் நாள் நடைபெற்றது. இதற்குள் அதிமுக கட்சி ஒண்றிணைந்து விட்டதால், மீண்டும் அதற்கு “இரட்டை இலை” சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அக்கட்சியே இரு தொகுதிகளிலும் வென்றது.[8] பின்பு செயலலிதா தலைமையில் 1991, 2002, 2011, 2016 தேர்தல்களில் செயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. 2014 மக்களவை தேர்தலையும் 2016 சட்டம்ன்ற தேர்தலையும் கூட்டணி இல்லாமல் சந்தித்து வெற்றி கண்டது.
ஜெயலலிதா மறைவு[தொகு]
அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியிலிருக்கும்போது 5 டிசம்பர் 2016 அன்று காலமானார். ஜெயலலிதா மறைந்த நாளின் இரவினையடுத்து, 6 டிசம்பர் 2016 அன்று அதிகாலை 1 மணிவாக்கில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.[9] அதற்குப் பின்னர் 29 டிசம்பர் 2016 அன்று அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி அதிமுக கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக வி. கே. சசிகலாவை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர்.[10][11][12]
5 பிப்ரவரி 2017 அன்று அஇஅதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[13][14] இதனையடுத்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.[15] விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அடுத்த ஏற்பாடுகள் முடிவடையும்வரை பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார் என்று அறிவித்தார்.
7 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த பொறுப்பு முதல்வர் பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாக தெரிவித்தார்.[16] இதனைத் தொடர்ந்து, அஇஅதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார். இதனால் பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அஇஅதிமுக பிரிந்தது. ஓ.பி.எஸ் அணியில் மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை ஆகியோர் இணைந்தனர். இதனால் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் சசிகலா நீக்கினார்.
பிறகு சசிகலா தன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அணி மாறாமல் இருப்பதற்காக அவர்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைத்தார். தன்னிடம் போதிய ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருப்பதால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா. ஆனால் அவர் மீது உச்சநீதிமன்றத்தல் சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததால் ஆளுநர் தொடர்ந்து அமைதி காத்து வந்தார். பிறகு அந்த வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டதால் அவர் சிறை செல்ல நேர்ந்தது. அவர் சிறை செல்லும் முன்பு ஆலோசனை கூட்டம் நடத்தி எடப்பாடி க. பழனிசாமியை சட்டமன்றக் குழுத்தலைவராகவும், டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் நியமித்தார். பிறகு 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராய் பதவியேற்று 6 மாதங்களில் ஓ. பன்னீர்செல்வம் அணி மீண்டும் கட்சியில் இணைந்தது. ஓ. பன்னீர்செல்வம் தமிழக அரசின் துணை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஆக்கப்பட்டார். சசிகலாவால் நீக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் கட்சிக்குள் சேர்க்கப்பட்டனர். மேலும், பெங்களூர் சிறையிலிருந்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் வி .கே. சசிகலா மற்றும் அவரின் ஆதரவாளர்கள், கட்சியின் அவசர பொதுக்குழுவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதன்பின் சசிகலாவிற்கு ஆதவராக, 19 ஆதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் மனு அளித்தனர். இவர்களை விசாரித்து பதவிநீக்கம் செய்யும்படி சபாநாயகருக்கு, அதிமுக சட்டசபை கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். இவர்களுள் உறுப்பினர் ஜக்கையன் மட்டும் மன்னிப்பு கடிதம் வழங்கினார், மீதமுள்ள 18 உறுப்பினர்களின் பதவிகள் சபாநாயகரால் பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து 18 உறுப்பினர்களின் மேல்முறையிட்டு மனுக்களும் தோல்வி அடைந்தன. மேலும் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி உட்பட 4 சட்டசபை உறுப்பினர்கள் மறைவால் தமிழகத்தில் 22 தொகுதிகள் வெற்றிடமாகின. 2019 மே மாதம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுடன் தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளின் இடை தேர்தலும் நடந்தது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சசிகலா ஆதரவாளர்கள் 22 இடங்களிலும் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்டனர். ஆனால் அதிமுக 12 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது, சசிகலா ஆதரவாளர்கள் அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தனர்.
அ.இ.அ.தி.மு.க வின் வெற்றி, தோல்விகள்.[தொகு]
எம்.ஜி.ஆர்க்கு பின் திராவிட கட்சிகளான அஇஅதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சிசெய்துகொண்டு வருகின்றன.
வரிசை எண் | பெயர் | தொடக்கம் | முடிவு | முறை | கட்சி |
---|---|---|---|---|---|
1 | எம். ஜி. இராமச்சந்திரன் | 30 ஜூன், 1977 | 17 பிப்ரவரி, 1980 | 1 | அ.இ.அ.தி.மு.க |
2 | எம். ஜி. இராமச்சந்திரன் | 9 ஜூன், 1980 | 15 நவம்பர், 1984 | 2 | அ.இ.அ.தி.மு.க |
3 | எம். ஜி. இராமச்சந்திரன் | 10 பிப்ரவரி, 1985 | 24 டிசம்பர், 1987 | 3 | அ.இ.அ.தி.மு.க |
4 | இரா. நெடுஞ்செழியன் | 24 டிசம்பர், 1987 | 7 ஜனவரி, 1988 | 1 | அ.இ.அ.தி.மு.க |
5 | ஜானகி இராமச்சந்திரன் | 7 ஜனவரி, 1988 | 30 ஜனவரி, 1988 | 1 | அ.இ.அ.தி.மு.க (ஜானகி அணி) |
6 | ஜெ. ஜெயலலிதா | 24 ஜூன், 1991 | 12 மே, 1996 | 1 | அ.இ.அ.தி.மு.க |
7 | ஜெ. ஜெயலலிதா[17] | 14 மே, 2001 | 21 செப்டம்பர், 2001 | 2 | அ.இ.அ.தி.மு.க |
8 | ஓ. பன்னீர்செல்வம் | 21 செப்டம்பர், 2001 | 1 மார்ச்சு, 2002 | 1 | அ.இ.அ.தி.மு.க |
9 | ஜெ. ஜெயலலிதா | 2 மார்ச்சு, 2002 | 12 மே, 2006 | 3[17] | அ.இ.அ.தி.மு.க |
10 | ஜெ. ஜெயலலிதா | 16 மே, 2011 | 27 செப்டம்பர், 2014 | 4[17] | அ.இ.அ.தி.மு.க |
11 | ஓ. பன்னீர்செல்வம் | 29 செப்டம்பர், 2014 | 22 மே, 2015 | 2 | அ.இ.அ.தி.மு.க |
12 | ஜெ. ஜெயலலிதா | 23 மே, 2015 | 22 மே, 2016 | 5 | அ.இ.அ.தி.மு.க |
13 | ஜெ. ஜெயலலிதா | 23 மே, 2016 | 5 திசம்பர், 2016 | 6 | அ.இ.அ.தி.மு.க |
14 | ஓ. பன்னீர்செல்வம் | திசம்பர் 6, 2016 | பிப்ரவரி 16, 2017 | 3 | அ.இ.அ.தி.மு.க |
15 | எடப்பாடி க. பழனிசாமி | பிப்ரவரி 16, 2017 | தற்போது | 1 | அ.இ.அ.தி.மு.க |
மக்களவை[தொகு]
தமிழ்நாடு வேட்பாளர்கள் பட்டியல், வெற்றிபெற்ற வாக்குகள்[தொகு]
அம்மா அன்பு மாளிகை, ராயப்பேட்டை
வருடம் | பொதுத்தேர்தல் | கிடைத்த வாக்குகள் | வெற்றிபெற்ற தொகுதிகள் |
---|---|---|---|
1977 | 6ஆவது மக்களவை | 5,365,076 | 17 |
1980 | 7ஆவது மக்களவை | 4,674,064 | 2 |
1984 | 8ஆவது மக்களவை | 3,968,967 | 12 |
1989 | 9ஆவது மக்களவை | 4,518,649 | 11 |
1991 | 10ஆவது மக்களவை | 4,470,542 | 11 |
1996 | 11ஆவது மக்களவை | 2,130,286 | 0 |
1998 | 12ஆவது மக்களவை | 6,628,928 | 18 |
1999 | 13ஆவது மக்களவை | 6,992,003 | 10 |
2004 | 14ஆவது மக்களவை | 8,547,014 | 0 |
2009 | 15ஆவது மக்களவை | 6,953,591 | 9 |
2014 | 16ஆவது மக்களவை | 17,983,168 | 37 |
2019 | 17ஆவது மக்களவை | 7,830,520 | 1 |
15ஆவது மக்களவை[தொகு]
15ஆவது மக்களவைக்கு அதிமுக 23 தொகுதிகளில் போட்டியிட்டு பின்வரும் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது.[18] திருவள்ளூர் (தனி), தென் சென்னை, விழுப்புரம் (தனி), சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, கரூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது.
16ஆவது மக்களவை[தொகு]
16 ஆவது மக்களவைக்கு அஇஅதிமுக 39 தொகுதிகளில் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்று இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தைப் பிடித்தது.[19] தருமபுரியில் பாமகவின் அன்புமணியும், கன்னியாகுமரியில் பாசகவின் பொன். இராதா கிருட்டிணனும் வென்றனர்.
17ஆவது மக்களவை[தொகு]
17 ஆவது மக்களவைக்கு அஇஅதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டு, தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
சட்டசபை[தொகு]
வருடம் | பொதுத்தேர்தல் | கிடைத்த வாக்குகள் | வெற்றிபெற்ற தொகுதிகள் | வேட்பாளர் பட்டியல் |
---|---|---|---|---|
1977 | 6வது சட்டசபை | 5,194,876 | 131 | [1] |
1980 | 7வது சட்டசபை | 7,303,010 | 129 | [2] |
1984 | 8வது சட்டசபை | 8,030,809 | 134 | |
1989 | 9வது சட்டசபை | 148,630 | 2 | |
1991 | 10வது சட்டசபை | 10,940,966 | 164 | |
1996 | 11வது சட்டசபை | 5,831,383 | 4 | |
2001 | 12வது சட்டசபை | 8,815,387 | 132 | |
2006 | 13வது சட்டசபை | 10,768,559 | 61 | |
2011 | 14வது சட்டசபை | 1,41,49,681 | 151 | |
2016 | 15வது சட்டசபை | 1,76,17,060 | 125 |
புதுச்சேரி[தொகு]
வருடம் | பொதுத்தேர்தல் | கிடைத்த வாக்குகள் | வெற்றிபெற்ற தொகுதிகள் |
---|---|---|---|
1974 | 3வது சட்டசபை | 60,812 | 12 |
1977 | 4வது சட்டசபை | 69,873 | 14 |
1977 | 6வது மக்களவை | 115,302 | 1 |
1980 | 5வது சட்டசபை | 45,623 | 0 |
1985 | 6வது சட்டசபை | 47,521 | 6 |
1990 | 7வது சட்டசபை | 76,337 | 1 |
1991 | 8வது சட்டசபை | 67,792 | 6 |
1996 | 9வது சட்டசபை | 57,678 | 3 |
1998 | 12வது மக்களவை | 102,622 | 0 |
2001 | 10வது சட்டசபை | 59,926 | 3 |
2006 | 11வது சட்டசபை | 3 | |
2011 | 12வது சட்டசபை | 5 | |
2016 | 13வது சட்டசபை | 1,34,597 | 4 |
சின்னம் முடக்கம்[தொகு]
அஇஅதிமுகவில் உள்ள சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இரு அணிகளும் உரிமை கோரியதால், ராதாகிருட்டிணன் நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. அதேபோல், அதிமுக என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதித்தது.[20] பன்னீர் செல்வம் அணிக்கு இரட்டை விளக்கு உள்ள மின்கம்ப சின்னத்தையும், சசிகலா அணிக்கு தொப்பி சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பன்னீர் செல்வம் அணிக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரையும், சசிகலா அணிக்கு அதிமுக அம்மா என்ற பெயரையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பணப்பட்டுவாடா காரணத்தால் ஆர் கே. நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆகத்து மாதம் இறுதியில் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் அணிகள் இணைந்தன மற்றும் தினகரன் தனி அணியாக செயல்பட்டார். கட்சியில் பெரும்பான்மை இருந்ததால் அதிமுக கட்சி மற்றும் சின்னம் எடப்பாடி கே. பழனிச்சாமி-பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டது.[21]